பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் விதிமுறை மீறி விடுதி கட்டுமானம்- பக்தர்கள் எதிர்ப்பு

பொது மக்கள் கொடுத்த நன்கொடையை பயன்படுத்தி தற்போது கோவில் 3-ம் பிரகாரத்தில் விதிமுறைகைள மீறி 2 அடுக்கு விடுதி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் விதிமுறை மீறி விடுதி கட்டுமானம்- பக்தர்கள் எதிர்ப்பு
Published on: 

பொன்னேரியில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னரால் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானால் ஏற்பட்ட சாபம் விலக பார்வதிதேவி இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 11 அமாவாசைகள் வழிபட்டு சாப விமோச்சனம் பெற்றதாக ஐதீகம். பார்வதிதேவி வழிபட்டமையால் இங்கு அமாவாசை அன்று சிவசக்தி பூஜை நடை பெறுவது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. இதன் திருப்பனியின் போது உரிய வழிகாட்டுதலை பின்பற்றாமல் திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டதாக ஏற்கனவே பக்தர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

பொது மக்கள்

இந்த நிலையில் திருப்பணிக்காக பொது மக்கள் கொடுத்த நன்கொடையை பயன்படுத்தி தற்போது கோவில் 3-ம் பிரகாரத்தில் விதிமுறைகைள மீறி 2 அடுக்கு விடுதி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகம விதிகளுக்கு முரணாக கோவில்பிரகாரத்தில் விடுதி கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், இந்து அறநிலையத்துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றிற்கு புகார் மனுவும் அனுப்பி உள்ளனர்.

நன்கொடை

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, தனி நபர்கள் பயன்பாட்டிற்கு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விடுதி கட்டப்படுகிறது. அவசர அவசரமாக புதிதாக கட்டப்படும் விடுதி கட்டிடத்தில் தனிநபர்கள் நன்கொடையில் வாகன கிடங்கும் கட்டப்படுவதாக விளம்பர பதாகை வைத்துள்ளனர். ஆகம விதிகளுக்கு எதிராக நடைபெறும் இந்த கட்டுமான பணியை தடுத்து நிறுத்த கோரி சிவனடியார்கள் சிலர் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளனர் என்றனர்.

X