

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தை திமுக புறக்கணித்த நிலையில், 25 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் திருமாவளவன் முன்வைத்த கருத்துகளை அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் பகிர்ந்துள்ளார். அப்பதிவின்படி அவர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது.,
“பாஜக அரசின் தவறான அணுகுமுறையால் இந்தியாவின் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுகின்றன.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு பாஜக அரசில் எவருமே பொறுப்பேற்கவில்லை.
இதற்கு பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மௌனமாக இருக்கிறார். இதன் காரணமாக மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தி உள்ளனர். இது அரசியல் கட்சிகள் அனைவருக்கும் எச்சரிக்கை மணியாகும்.
இளைஞர்களுடைய பிரச்சனைகளுக்காக நாம் தெருவில் இறங்கி போராடாத காரணத்தினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் குரலை வெளிப்படுத்துகிற காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற அமைப்பை நாம் எதிர்நிலையில் வைத்து பார்க்கக் கூடாது.
அவர்கள் எழுப்பும் பிரச்சனைகளை இன்னும் விரிவான தளத்தில் இந்தியா கூட்டணி முன்னெடுக்க வேண்டும். அதற்காக நாடு தழுவிய போராட்டங்களை நாம் அறிவிக்க வேண்டும்.
நரேந்திர மோடி அரசின் தவறான வெளியுறவு கொள்கையால் இப்போது நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என தெரியாத பிரதமரோ, மக்களெல்லாம் சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுரை சொல்கிறார்.
கோவிட் காலத்தில் எப்படி திறமையற்ற இந்த அரசால் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தார்களோ அதே போல இப்போதும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதை அம்பலப்படுத்தி நாடு தழுவிய அளவில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இந்தப் போராட்டங்களை செய்வதற்கு எதிர்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வும், ஒற்றுமையும் அவசியம். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது.
இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
இந்தியா கூட்டணியில் தேசியக் கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இயல்பாகவே தேசியக் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையே முரண்களும் இருக்கும். அவற்றை கூர்மைப்படுத்தக்கூடாது.
அந்தப் பொறுப்பு மாநில கட்சிகளுக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகளுக்கும் உள்ளது. இப்போது மத்திய, மாநில உறவுகள் மிக மிக சீர்கேடு அடைந்துள்ள சூழலில் தேசியக் கட்சிகள் கூட்டாட்சி என்ற அடிப்படையில் தங்களது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும்.
இதன் ஒரு அங்கமாக ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மும்மொழிக் கொள்கையைப் பற்றி தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கூட்டணி எடுக்க வேண்டும்.
அது போலவே மத்திய, மாநில உறவுகளை ஆராய்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நீதிபதி குரியன் ஜோசப் ஆணையம் முன் வைத்துள்ள பரிந்துரைகளையும் இந்தியா கூட்டணி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. எனப் பேசியுள்ளார்.