

மதுக்கடையில் இருந்து வந்த நபர் ஒருவர் மதுபாட்டிலை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார். பின்னர் அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் வழியாக கோவில்பட்டிக்கு தினந்தோறும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்72 என்2826 என்ற எண் கொண்ட சி.என்.ஜி. பஸ் ஒன்றும் புதிதாக இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்ட அந்த பஸ் திருவேங்கடத்தில் பயணிகளை ஏற்றிவிட்டு புறப்பட்டது. இந்த பஸ்சில் டிரைவராக கணேசமூர்த்தி, கண்டக்டராக முத்தையா ஆகியோர் பணியில் இருந்தனர்.
பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் கோவில்பட்டி சாலையில் திருவேங்கடம் எலுமிச்சை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்றது. தொடர்ந்து பஸ்சின் பின்பக்க வாசலில் அந்த பஸ் கண்டக்டர் நின்று கொண்டிருக்க, எதிரே இருந்த மதுக்கடையில் இருந்து வந்த நபர் ஒருவர் மதுபாட்டிலை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார். பின்னர் அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதனை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காட்சிகளை பார்த்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடயே, போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பஸ்சில் , பணியில் இருந்த டிரைவர் கணேசமூர்த்தியை ‘சஸ்பெண்டு’ செய்தனர்.
மேலும் தினக்கூலி பணியாளரான கண்டக்டர் முத்தையாவை நிரந்தரமாக பணியில் இருந்து நிறுத்தம் செய்து போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.