குமரி மாவட்டம் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பறக்கை பகுதியில் வழக்கு விசாரணைக்காக சென்றிருந்தார். வழக்கு விசாரணைக்கு சென்றபோது, அவரிடம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணைக்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடிபோதையில் இருந்ததாக கூறிய அப்பகுதி மக்கள், அதனை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில் வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தரப்பில், “தனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்றும், தன்னுடைய பேச்சு வழக்கே அப்படித்தான் இருக்கும்” என்றும் விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.