

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திட உத்தரவிட்டு, அதன்படி 12 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏதுவாக,
மயிலாப்பூர், மாடம்பாக்கம், மைலேடீஸ் பூங்கா ஆகிய இடங்களில் நாற்றங்கால்
பண்ணைகள் அமைக்கப்பட்டு செடிகள் நடவு செய்து வளர்க்கும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் வனத்துறை, தனியார் பண்ணைகளிலிருந்தும் மரக்கன்றுகள் பெற்று நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் 1,04,650 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 993 பூங்காக்கள், 417 சென்னை பள்ளிகள், திறந்தவெளி நிலங்கள், மயான பூமிகள், விளையாட்டுத் திடல்கள், குளங்கள், ஏரிகள், பாலவாக்கம் கடற்கரை, மெரினா கடற்கரை, திருவான்மியூர்
கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை
கொட்டும் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்ட இடங்கள், சாலைகளில் போக்குவரத்து
மையப் பகுதிகள், சாலைகளில் உள்ள போக்குவரத்து தீவுப் பகுதி, மக்கள் குடியிருப்புப்
பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள், செடிகள் நடும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தன்னார்வலர்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை தங்களது பகுதிகளல் மரக்கன்றுகள் நடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.