

டியூஷன் படிக்க வந்த மாணவ, மாணவிகள் பார்த்து அதிர்ச்சி – மகளின் உடலைப் பார்த்து கால்களைப் பிடித்து பெற்றோர் கதறி அழுத பரிதாபத்தை ஏற்படுத்தியது.
குழித்துறை அருகே காதலன் உயிரிழந்த துயரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குழித்துறை அருகே இடைத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் அமிர்தா கிருஷ்ணன் (18). இவர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், தனது வீட்டிலேயே டியூஷன் சென்டர் நடத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரும், அமிர்தா கிருஷ்ணனும் காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கிப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அர்ஜுன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
காதலன் உயிரிழந்த செய்தியைக் கேட்ட அமிர்தா கிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சோகத்துடன் காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே, மாலை சுமார் 5 மணியளவில் வழக்கம்போல் டியூஷன் படிப்பதற்காக பள்ளி மாணவ, மாணவிகள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது டியூஷன் ஆசிரியையான அமிர்தா கிருஷ்ணனை தேடி அறைக்குள் சென்ற மாணவ, மாணவிகள், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதையடுத்து அவர்கள் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். மாணவ, மாணவிகளின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மாணவியின் பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு அங்கு ஓடி வந்தனர். அப்போது தங்களது அன்பு மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு பெற்றோர் கதறித் துடித்தனர்.
மகளின் நிலையைப் பார்த்து நிலைகுலைந்த பெற்றோர், அவரது கால்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. தங்களது மகளை இழந்த வேதனையில் பெற்றோர் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் உயிரிழந்த சில நாட்களிலேயே கல்லூரி மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குழித்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.