ஏரிகள்-உபரிநீர் கால்வாய் பகுதியில் கலெக்டர் ஆய்வு

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சீராக செல்லும் வகையிலும், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஏரிகள்-உபரிநீர் கால்வாய் பகுதியில் கலெக்டர் ஆய்வு
Published on: 
Summary

நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்கள் மற்றும் எந்திரங்களை பார்வையிட்டு, உபகரணங்களை இயக்கி பார்த்து கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புதடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

காட்டாங்கொளத்தூர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மு.வீரப்பன் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் உடன் இருந்தார்.

கலெக்டர்

நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்கள் மற்றும் எந்திரங்களை பார்வையிட்டு, உபகரணங்களை இயக்கி பார்த்து கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகர் பகுதியில் உள்ள வல்லாஞ்சேரி உபரி நீர் செல்லும் கால்வாயினை பார்வையிட்டு, கால்வாயில் அடைப்பு ஏற்படாதவாறு கண்காணிக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மழை நீர்

பின்னர், நந்திவரம்–கூடுவாஞ்சேரி வைகுண்டன் குடியிருப்பு அருகில் செல்லும் மண்ணிவாக்கம் ஏரியின் வரத்து வாய்க்கால், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊரப்பாக்கம் ஏரி, நந்திவரம்–கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகரில் உள்ள கல்வெட்டுப் பகுதி, நந்திவரம் ஏரியின் மதகு, உபரிநீர் செல்லும் கால்வாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு, அதிக மழைப்பொழிவு ஏற்பட்டாலும் தடையின்றி மழைநீர் செல்லும் வகையிலும், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சீராக செல்லும் வகையிலும், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மழைநீர் பாதிப்பு

மேலும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயரம்பேடு, விஷ்ணுப்பிரியா நகர் பகுதியில் மழைநீர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை பணிகளை பார்வையிட்டு, மழைநீர் அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடாசலம், நகராட்சி ஆணையர் லதா, நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், செங்கல்பட்டு நீர்வளத்துறை உதவி பொறியாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com