

குளிரால் உள்ளூர் மக்கள், முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொடைக்கானலில் முன்கூட்டியே பனிக்காலம் தொடங்கிவிட்ட அறிகுறி தென்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் கடந்த வாரம் வரை வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரில் உள்ள பேரிஜம், நட்சத்திர ஏரி, பெப்பர், புலவிச்சாறு, ஓராதி, கரடிச்சோலை, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர புதிய அருவிகளும் உருவாகின.
கொடைக்கானலில் வழக்கமாக நவம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி, பிப்ரவரி வரை பனிக்காலமாக இருக்கும். ஆனால் தற்போது மழை பெய்து ஓய்ந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக பகல் பொழுதில் அதிக வெப்பம் நிலவி வந்தது. காலையில் நட்சத்திர ஏரி பகுதியில் உள்ள செடி, புல்வெளிகளில் பனி படர்ந்து காணப்பட்டது. இரவு நேரங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது.
நட்சத்திர ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஜிம்கானா, கீழ்பூமி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை நேரத்தில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் பனித்துகள்கள் படர்ந்து காணப்பட்டது. இந்த பகுதியில் 10 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை பதிவானது.
கொடைக்கானலில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதன்படி தரைப்பகுதியில் கடும் வெப்பம் வாட்டி வரும் நிலையில் கொடைக்கானலில் நிலவும் கடும் குளிர் அவர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும்.
அதே சமயம் கடும் குளிரால் உள்ளூர் மக்கள், முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொடைக்கானலில் முன்கூட்டியே பனிக்காலம் தொடங்கிவிட்ட அறிகுறி தென்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் காலை நேரங்களில் குளிருக்கு இதமான ஆடைகளை அணிந்தபடி ஏரிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.