கோவை ஜெயில் வளாகத்தில் இருந்து தப்பிய கைதி போலீசில் சிக்கினார்

தனிப்படை போலீசார் ஈரோடு, நீலகிரி மற்றும் கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கோவை ஜெயில் வளாகத்தில் இருந்து தப்பிய கைதி போலீசில் சிக்கினார்
Published on: 
Summary

தனிப்படை போலீசார் ராகவனை கோவைக்கு அழைத்து வந்தனர். ராகவன் தப்பி ஓடியது தொடர்பான வழக்கை விசாரிக்கும் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ராகவன் ஒப்படைக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்தவர் ராகவன் (வயது 42). இவர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தப்பி ஓட்டம்

கடந்த 30-ந் தேதி இவரை கோவை மாவட்டம் அன்னூர் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை மத்திய ஜெயிலில் அடைப்பதற்காக ராகவனை, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் அழைத்து வந்தனர். மத்திய ஜெயில் வளாகத்தில் போலீசாரை தாக்கி விட்டு ராகவன் தப்பிச் சென்றான்.

இதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாக கைதியை அழைத்து வந்த 4 போலீசாரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

6 தனிப்படைகள் விசாரணை

தப்பி ஓடிய ராகவனை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஈரோடு, நீலகிரி மற்றும் கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைது

இந்தநிலையில் ராகவன், சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு ராகவன் இருக்கும் இடத்தை அறிந்தனர். தொடர்ந்து இரவில் ராகவனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

போலீசார்

பின்னர் தனிப்படை போலீசார் ராகவனை கோவைக்கு அழைத்து வந்தனர். ராகவன் தப்பி ஓடியது தொடர்பான வழக்கை விசாரிக்கும் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ராகவன் ஒப்படைக்கப்பட்டார். ராகவனிடம் போலீசார் விடிய, விடிய விசாரித்தனர்.

விடிய, விடிய விசாரணை

ராகவன் போலீசாரை தாக்கி விட்டு சத்தியமங்கலத்துக்கு எப்படி தப்பிச் சென்றார், அவருக்கு யாராக உதவினார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது பல்வேறு தகவல்களை ராகவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ராகவனிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணைக்கு பின்னர் இன்று ராகவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் ராகவனை பலத்த பாதுகாப்புடன் ஜெயிலில் அடைக்கவும் போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

கைதிகள்

திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்து ஒரே சமயத்தில் 17 கைதிகள் தப்பிச் சென்ற நிலையில் கோவையில் ராகவன் தப்பிச் சென்ற சம்பவம் போலீசாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் ராகவன் பிடிபட்டதால் கோவை போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.

X