

தேங்காய் குடோனில் வெள்ளம் புகுந்ததில் அங்கு விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்ததில் ரெயிலடி சாலை, புதுதாராபுரம் சாலை, உடுமலை சாலை ஆகியவற்றில் சாலையின் இருபுறமும் மழை நீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது.
சண்முகாபுரம் சத்தியாநகர், பெரியப்பா நகர், இந்திராநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலையில் முழங்கால் அளவுக்கு சென்ற தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்து சென்றன. கனமழையால் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. ஆயக்குடி பேரூராட்சியில் பழனியம்மாள் என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
நத்தம் பகுதியில் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்ததில் வரத்து கால்வாய்கள் மூலம் கண்மாய்கள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மணக்காட்டூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் கரந்தமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்த நீர் பாலாற்றில் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர். நத்தம் வட்டாட்சியர் டேனியேல் பிரேம்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
நத்தம்-புதுப்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி (வயது 42) என்பவரது தேங்காய் குடோனில் வெள்ளம் புகுந்ததில் அங்கு விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மன வேதனையில் உள்ள அவர் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.