டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் மேட்டுர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.
Mettur dam - CM Vijay
Published on
Summary

கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணை

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் மேட்டுர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.

காவிரி நீர்வரத்து

இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணை

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.47 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 35 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் விஜய்

இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முதலமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் வரும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

போலீசார் பாதுகாப்பு

அதாவது முதலமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணையின் வலது கரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 15-வது நாளாக நீடித்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com