முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்

மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.
Durai Murugan - Vijay
Published on

காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு காவிரி நீரில் உரிய பங்கை தருவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் செயல்படுத்த மறுக்கிறது.

விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் போதிய மழை பெய்யாததால் அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. வறட்சி நிலவுகிறது என்ற காரணத்தை சொல்லி காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.

காவிரி நீரில் உரிய பங்கு கிடைக்காததால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்து வருகிறது.

மேகதாது அணை

இந்த சூழ்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு, புதிதாக அணை கட்டுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் விஜய் கடிதம்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் கடிதமும் எழுதி உள்ளார்.

மேலும் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் அனைத்து முயற்சிகளையும் சட்டரீதியாக தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

காவிரி மேலாண்மை ஆணையம்

இந்த சூழலில் டெல்லியில் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பேசிய தமிழக நீர்வளத்துறை செயலாளர், கர்நாடகத்தில் உள்ள 4 முக்கிய அணைகளில் 48.979 டி.எம்.சி. தண்ணீர் இருப்பை சுட்டிக்காட்டியதுடன், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி விகிதாசார அடிப்படையில் தண்ணீரை திறக்கவும் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

அதற்கு கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்தில் உள்ள 4 முக்கிய அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதால் தங்களால் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிவிட்டது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

பெங்களூரு செல்லும் விஜய்

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எழுதி உள்ள கடிதத்தில், வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி, தான் பெங்களூரு வந்து காவிரி நீர் பிரச்சனை, மேகதாது விவகாரம் குறித்து உங்களுடன் பேச விரும்புகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவது குறித்தும், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

துரைமுருகன்

இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* முதலமைச்சர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.

* உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

* காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும்.

* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.

* என்ன நடக்கிறது என்பது முதலமைச்சர் சென்று வந்த பின்னர் தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com