

தமிழர் தந்தை ‘சி.பா.ஆதித்தனாரின்’ 122வது பிறந்தநாளில், தமிழ் சமூகத்திற்கு ஆதித்தனார் ஆற்றிய தொண்டு குறித்து, தமிழக முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தில் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 1905ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று பிறந்தார்.
வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்ற அவர், கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே சிறு தொழில்கள் செய்து முன்னேறுவது குறித்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளார்.
இவர் 1942-ம் ஆண்டு முதன்முதலாக 'மதுரை முரசு' என்ற இதழையும், பின்னர் 'தமிழன்' என்ற வார இதழையும் தொடங்கினார். 1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் 'தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, 'மாலை முரசு' என்ற மாலைப் பத்திரிகையையும் 'ராணி' என்ற வார இதழையும் தொடங்கினார்.
பத்திரிகைகளில் மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தமிழ்ச்சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட யுக்திகளைக் கையாண்டார்.
இதையடுத்து 1942-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் சட்டசபை சபாநாயகராக பணியாற்றினார். அப்போது, சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதை அறிந்து தமிழில் மொழிபெயர்த்தார்.
திருக்குறள் கூறி அவையை ஆரம்பிக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார். மேலும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை 'மாண்புமிகு' என்று அழைக்கும் முறையை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாளில், அவர் ஆற்றிய சமூக தொண்டுகளை நினைவு கூர்ந்து தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில், தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
இதழியல் துறையில் உயிரோட்டமான எளிய தமிழ்நடையை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதனும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள்.
தமிழ்நாடு அரசின் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்த அவர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்தபோது, சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கும் நடைமுறையைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் நம் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார்.