நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம்பெறும். அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெறும்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on

ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்தார்.

பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்யும் முறையினை ஏற்கனவே பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

பதிவு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதான சேவையை வழங்கவும் நேரில் வருகையற்ற பதிவு (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இம்முறையில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகிய ஆவணங்களைத் தற்போது பதிவு செய்யலாம். இம்முறையில் ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்க இயலும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகைதர வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.

ஆவணப்பதிவு முறை

1. பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

3. ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

தொழில்நுட்பத் தேவைகள்

இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் ஸ்கேன் செய்யும் கருவி, புகைப்படம் எடுக்க நீலநிறத் திரை (புகைப்படம் எடுப்பவரின் பின்புறத்தில் வைத்திருக்க வேண்டும்), புகைப்படக் கருவி (Webcam) ஆகிய தொழில்நுட்ப உபகரணங்கள் தேவைப்படும்.

வருகையில்லா ஆவணப்பதிவின் முக்கிய அம்சங்கள்

வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சார்பதிவாளர்களால் தற்போதுள்ள நடைமுறையில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும்.

திருத்தத்திற்காகத் திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களைத் திருப்பி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவில் அவை கிடைக்கச் செய்யப்படும்.

பயனர் உள்நுழைவில் கிடைக்கும் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது.

60 நாட்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு (Certified Copy) விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.

வருகையில்லா ஆவணப்பதிவின் பாதுகாப்பு அம்சங்கள்

ஆவணத்தின் பதிவுச் சான்றுரை (Endorsement) ஒவ்வொரு முறையும் மாறுபடும் ஐந்து நிறங்களைக் கொண்ட தானியங்கி சீரற்ற நிற அமைப்பில் (Dynamic Random Five Colours) அச்சிடப்படும். சான்றிட்ட நகல் கோரப்படும் போது கருப்பு-வெள்ளை நகல் மட்டுமே வழங்கப்படும்; அசல் நிற டிஜிட்டல் நகல் பொதுமக்களின் உள்நுழைவில் 60 நாட்கள் வரை கிடைக்கும். இதனால் அசல் ஆவணத்தின் பதிவுச் சான்றுரையில் இடம்பெற்ற நிற அமைப்பை ஆவண உரிமையாளர் அறிந்துகொள்ள இயலும்; போலி ஆவணம் உருவாக்குவதைத் தடுக்கும் கூடுதல் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம்பெறும். அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெறும். பதிவு அலுவலர் ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிடுவார். காகித ஆவணத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கலாம். டிஜிட்டல் ஆவணம் மாற்றம் செய்யப்பட்டால், டிஜிட்டல் கையொப்பச் சரிபார்ப்பில் “X” குறியீடு தோன்றுவதன்மூலம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறியலாம்.

பொதுமக்கள் நலனுக்காகவும், பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்திடும் வகையிலும் மனைப்பிரிவிற்கான முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான முதல் வீடு விற்பனை ஆவணத்தை பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின்கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com