

மூக்கையூர் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், எல்லை மற்றும் விதிகளை மீறி நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்து வரும் கரையோர பகுதிக்கு மீன்பிடிக்க வந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அருகே மூக்கையூர் கிராமத்தில் மீன்பிடித்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட தினமும் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்தப் பகுதி மீனவர்கள் நாட்டு படகு மீனவர்களுக்கு ஒரு எல்லையையும், விசைப் படகு மீனவர்களுக்கு ஒரு எல்லையையும் வகுத்து வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்த எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும், எல்லை மீறலில் ஈடுபடக்கூடாது என்று அதற்கான சங்கம் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக மூக்கையூர் பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே சமீப காலமாக ஒரு தரப்பினர் தொடர்ந்து விதிகளை மீறி மீன்பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இருந்தபோதிலும், நாட்டுப் படகு மீனவர்கள் தங்களுக்காக எல்லை ஒதுக்கப்பட்ட கடற்கரை ஓரப்பகுதியில் மீன்களைப் பிடித்து வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் கடல் தொலைவில் மீன்களைப் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் எல்லை வரையறை செய்யப்பட்ட பகுதிகளுக்கு மற்றவர் செல்லும் போது அவர்களுக்கிடையே பயங்கர மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று இரவு மூக்கையூர் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், எல்லை மற்றும் விதிகளை மீறி நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்து வரும் கரையோர பகுதிக்கு மீன்பிடிக்க வந்துள்ளனர். அதிக ஒளி பாய்ச்சும் விளக்கு மூலம் இந்த பகுதிக்கு வராதீர்கள் என்று நாட்டுப்படகு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்தும் விசைப்படகு மீனவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாட்டுப்படகு மீனவர்கள் தாக்குதலை தொடங்கினர். அவர்களின் படகுகளை நோக்கி தங்கள் படகை செலுத்தி மோதினர். தொடர்ந்து நடுக்கடலில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக மீன்பிடி உபகரணங்களை கொண்டு தாக்கினர். இதையடுத்து அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் அதிகரித்தது. இந்த தாக்குதலில் மீனவர்கள் பலர் லேசான காயம் அடைந்தனர். அதேபோல் இருதரப்பை சேர்ந்த படகுகளும் சேதம் அடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த வாலிநோக்கம் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனவர்களின் மோதலை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்று காலை இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து அமைதிக்கூட்டம் நடந்தது. அதில் மேற்கொள்ளப்படும் முடிவுகளுக்கு நாட்டுப்படகு மற்றும் மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.