

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் நகர் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் தெருக்களில் காட்டு மாடுகள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தற்பொழுது குரங்கு தொல்லை அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் வீடுகளில் ஜன்னல்களைத் திறந்து வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி வருகிறது.
வீட்டில் ஆட்கள் இல்லாத நேரங்களில் ஜன்னல் கதவுகளை திறந்து உள்ளே சென்று உணவு பண்டங்கள் மற்றும் ஏனைய பொருட்களை எடுத்து தெருப்பகுதிகளில் வீசிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் ஆட்கள் இருக்கும் போதே நிலைக்கதவு மற்றும் ஜன்னல் கதவுகள் வழியாக எட்டிப் பார்த்து கண் இமைக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து பொருட்களை எடுத்துச் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் தங்களது புத்தக பைகளுடன் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது புத்தகப் பைகளை பிடுங்குவது, அன்றாட பணிகளுக்கு பைகளுடன் வெளியே வருபவர்களை குரங்குகள் துரத்துவது என்ற நிலை கல்லுக்குழி பகுதியில் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் பொருட்களை பறித்து அட்டகாசம் செய்து வந்த குரங்குகள் தற்போது குடியிருப்பு பகுதிக்குள்ளும் முகாமிட்டு இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வரவும், வீட்டுக்குள் இருந்தாலும் கதவை திறக்கவும் அச்சமடைந்துள்ளனர்.