தொடரும் மழையால் பல்லாங்குழிகளாக மாறிய சென்னை சாலைகள்

மழையால் 8,110 இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகி விட்டதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடரும் மழையால் பல்லாங்குழிகளாக மாறிய சென்னை சாலைகள்
Published on: 

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் பிரதான சாலைகள், பஸ் போகும் சாலைகள், தெரு சாலைகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் சுமார் 1000 கிலோ மீட்டர் ஆகும்.

மழை

தற்போதைய மழையால் 8,110 இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகி விட்டதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 5,350 இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாலைகள்

வேளச்சேரி, சூளைமேடு, தி.நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், மடிப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் சாலைகள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன.

இவ்வாறு குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேடு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

ஆஞ்சநேயர் கோவில்

பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் பக்த வச்சலம் பூங்கா முன்பு மிகவும் மோசமாக கிடக்கும் சாலை பற்றி அந்த பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் கூறியதாவது:-

இந்த பகுதியில் ஒவ்வொரு மழைக் காலத்திலும் இப்படித்தான் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. மோட்டார் வைத்து தண்ணீரை அகற்றுகிறார்கள். தற்காலிகமாக பேட்ச் ஒர்க் மட்டும் செய்கிறார்கள். நிரந்தரமாக சாலை போடுவதில்லை என்றார்.

சூளை டி.கே. முதலி தெருவை சேர்ந்த பாஸ்கர் கூறும் போது, இந்த பகுதி மழைக் காலத்தில் இப்படித்தான் குண்டும் குழியுமாக மாறிப் போகிறது. மாநகராட்சி தரமான சாலை போடுவதில்லை. இது தெடர்பாக பலமுறை மாநகராட்சியிடம் முறையிட்டு விட்டோம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com