ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: என்ன செய்யப் போகிறது தவெக அரசு?- டி.டி.வி. தினகரன்

மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை வெள்ளம்- டிடிவி தினகரன்
சென்னை வெள்ளம்- டிடிவி தினகரன்
Published on: 

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதும் சென்னை மாநகராட்சி மற்றும் தவெக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், மழைநீர் தேங்குவதை தடுக்கவும், தேங்கியிருக்கும் மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவாகவே, ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரமே முழுமையாகத் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும்

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கண்காணிப்புப் பணிக்காக நியமித்ததோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் முதலமைச்சர் ஜோசப் விஜய், களப்பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே பொதுமக்களை மழை பாதிப்புகளிலிருந்து காக்கும் என்பதை இனியாவது உணர வேண்டும்.

எனவே, மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு, களப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com