சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி

பயிற்சி அதிகாரிகளின் மன உறுதி மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி நடைபெற்றது.
chennai Military Academy
Published on

சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நாளை தங்களது பயிற்சியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள் இன்று தங்களது தீரச்செயல் திறன்களை செய்து காண்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி அகாடெமியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தற்காப்புக் கலை நிகழ்ச்சி

இளம் ராணுவ அதிகாரிகள், தங்கள் உடல் தகுதித் திறன்கள், ராணுவ தற்காப்புக் கலை, குதிரையேற்ற சாகசங்கள், களரிப்பயிற்று, பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி ஆகியவற்றை இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.

உடல் தகுதி மற்றும் வலிமைக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு உடற்பயிற்சிகளுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆயுதங்கள் ஏதுமின்றி எதிரியை எதிர்கொள்ளும் ராணுவ தற்காப்புக் கலை நிகழ்ச்சி இதில் இடம்பெற்றது.

சாகச நிகழ்ச்சி

அகாடமியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்ற விறுவிறுப்பான குதிரையேற்ற சாகச நிகழ்ச்சி, குதிரைகளுக்கும் சவாரி செய்பவர்களுக்கும் இடையிலான அற்புதமான இணக்கத்தை வெளிப்படுத்தியது.

குதிரைகளின் துல்லியமான அசைவுகள் மற்றும் சுறுசுறுப்பான இயக்கத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து, நடனம், தற்காப்பு, இசை, உடல் வளைந்து கொடுக்கும் திறன் ஆகியவற்றின் இணக்கமான கலவையான 'களரிப்பயிற்று' தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது; இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இறுதியாக, பயிற்சி அதிகாரிகளின் மன உறுதி மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி நடைபெற்றது.

போர்க்களத்தில் வீரர்களை வழிநடத்திச் செல்லத் தயாராகி வரும் இந்த இளம் அதிகாரிகள், தங்களுக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளனர் என்பதை இந்நிகழ்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது.

சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com