சென்னையில் 1200 இயற்கை உணவு வகைகள் - ருசித்து பாராட்டிய மக்கள்!

பொதுமக்கள் 1200 வகை உணவுகளையும் வியப்புடன் பார்த்து, ருசித்து மகிழ்ந்தனர்.
Natural Food Festival
Published on: 
Summary

இன்றைய காலகட்டத்தில் நள்ளிரவிலும், அதிகாலையிலும் வரிசையில் நின்று பிரியாணி சாப்பிடும் பழக்கமும், அதே வேளையில் நோய்களுக்காக மருத்துவமனைகளில் காத்திருக்கும் நிலையும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், மக்களை நோய்களின் பிடியில் இருந்து விடுவித்து ஆரோக்கியமாக வாழ வழிகாட்டும் நோக்கில், சென்னையில் பிரம்மாண்ட இயற்கை உணவுத் திருவிழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம்

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற இந்த விழாவில், தமிழகம் முழுவதிலும் இருந்து 22 யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவரும் இணைந்து ஒரே இடத்தில் அடுப்பு இல்லாமலும், எண்ணெய் பயன்படுத்தாமலும், வேக வைக்காமலும் 1,200 வகையான ஆரோக்கிய உணவுகளைத் தயாரித்து காட்சிப்படுத்தி "நோவா உலக சாதனை" புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

உணவுத் திருவிழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்

இந்த உணவுகளில் பால் மற்றும் தயிருக்கு மாற்றாக தேங்காய் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேங்காய் பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து 2 மணி நேரம் உறைய வைத்து சுவையான தயிர் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழம், அவகோடா மற்றும் பப்பாளி பழங்களில் இருந்து சாக்லேட் மற்றும் வெண்ணிலா வாசனையுடன் கூடிய இயற்கை மயோனைஸ் தயாரிக்கப்பட்டது.

காலை சிற்றுண்டி, மதிய உணவு, பானங்கள், ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு என ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து உணவுகளும் இதில் அடங்கும்.

இயற்கை விருந்து

இன்றைய தலைமுறையினர் விரும்பிச் சாப்பிடும் பிட்சா, பர்கர், மோமோஸ், சாண்ட்விச், கேக், லட்டு, கட்லெட், அல்வா மற்றும் பிரியாணி போன்றவற்றைக்கூட வேக வைக்காமல் இயற்கை முறையில் தயாரித்து மாணவர்கள் அசத்தினர்.

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி அவல் மூலம் தயாரிக்கப்பட்ட இட்லி, புட்டு, நூடுல்ஸ், சாம்பார் சாதம், புளிசாதம், கீரை சாதம், கொழுக்கட்டை, தோசை மற்றும் கிச்சடி ஆகியவையும் இடம்பெற்றன.

கேரட் கீர், சங்குப்பூ மற்றும் செம்பருத்திப் பூக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட இயற்கை பானங்கள் பொதுமக்களைக் கவர்ந்தன.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காலையில் தொடங்கி வைத்துப் பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "ஆரோக்கியமாக வாழ இவ்வளவு உணவு வகைகள் நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் மருத்துவமனைகளைத் தேடிச் செல்ல வேண்டும்?

இந்த இயற்கை உணவு முறைகள் குறித்து மக்களிடம் இன்னும் கூடுதலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

1200 வகை உணவுகள்

முன்னதாக, மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இயற்கை மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.

இந்த விழாவினை அரும்பாக்கம் அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மணவாளன், பேராசிரியை தீபா ஆகியோருடன் இணைந்து சைவ உணவு கழகம் மற்றும் ரோட்டரி சங்கங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன. விழாவிற்கு வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் இந்த 1200 வகை உணவுகளையும் வியப்புடன் பார்த்து, ருசித்து மகிழ்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com