

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது. ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், விடுமுறை நாட்கள் யாருக்கும் பயனுள்ளதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவின்படி, மாற்றங்களைச் செயல்படுத்தினால் கள அளவில் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அது குறித்து அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துணைப்பதிவாளர்களுக்கு பொது வினியோகத்திட்டத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.