காவிரி நீர் விவகாரம்: கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும்!- மாணிக்கம் தாகூர்

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
Nainar Nagendran- Anbumani ramadoss- Manickam Tagore
Published on

தமிழ்நாட்டிற்கு நீர் திறந்ததை எதிர்க்கும் கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால், முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு வரவுள்ள நிலையை உணர்ந்து, தனது நிலையைப் புரிந்துகொண்ட கர்நாடக அரசு தற்போது கபினியிலிருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்திலேயேபி. எஸ். எடியூரப்பா மற்றும் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தற்போது சட்டப்படி தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்துப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுத்து நிறுத்தத் துடிக்கும் பாஜகவின் இந்த வன்மமும் தமிழர்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது!

பாஜகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது பழி போடுவதற்கு முன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் முதலமைச்சரே இருந்தாலும் தவறு செய்தால் தமிழகத்தின் உரிமைக்காகத் தட்டிக்கேட்க நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை.

ஆனால், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராகச் செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல்

நயினார் நாகேந்திரன் அண்ணா எங்கே போனீர்கள்? கூட்டணி கட்சி தலைவர் ராமதாஸ் எங்கே இருக்கிறார்? ஏன் கூனிக் குறுகி மவுனம் காக்கிறீர்கள்?

தமிழ்நாட்டைப் பற்றியும் நமது விவசாயிகளைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையே இல்லையா?

தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உங்கள் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாமல் இங்கு வந்து அரசியல் நாடகம் நடத்துவதுதான் பாஜகவின் லட்சணமா?

பாஜகவின் இந்த நயவஞ்சகக் கொல்லைப்புற அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com