சாதி மறுப்பு திருமணம் : 2 உயிர்களை காவு வாங்கிய ஆணவக் கொலை

மனமுடைந்த ஷர்மிளா கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று சிகிச்சை பலனின்றி பலியானார்.
சாதி மறுப்பு திருமணம் : 2 உயிர்களை காவு வாங்கிய ஆணவக் கொலை
Published on

சென்னை பள்ளிக்கரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25 - ந்தேதி வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

ரத்த காயங்களுடன் கிடந்த அந்த வாலிபரை அக்கம்பத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான வாலிபர் பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் (26) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜல்லடையன் பேட்டையை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தது தெரியவந்தது.

மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெண் வீட்டில் கடும் கோபம் அடைந்தனர். இதனால் பள்ளிக்கரணை டாஸ்மாக் அருகில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 3 பேர் பிரவீனை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது

தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மி வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் பழி வாங்குவதற்காக கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் காதல் கணவன் பிரவீன் வெட்டி கொல்லப்பட்டதால் அவரது மனைவி ஷர்மிளா மிகுந்த மன வேதனையடைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மனமுடைந்த ஷர்மிளா கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த மனைவியும் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com