

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய வெற்றி பயணத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த காலங்களில் விடியல் பயணத்திட்டமாக இருந்தது, தற்போது த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்த திட்டம் வெற்றி பயணத்திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க 'மகளிர் விடியல் பயணம்' என்ற பெயரில் இலவச பேருந்து சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் இந்த திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அக்டோபர் 2-ஆம் தேதியன்று விரிவாக்கம் செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விரிவாக்க திட்டத்தின் படி மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய அறிவிப்பால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க கூடிய சூழலில் அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
வெற்றி பயண திட்டத்தால் தனியார் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக ஈரோட்டை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி வழக்கு தொடர்ந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவை சேர்ந்த கலாமணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் வெற்றி பயணம் திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து தொழிலை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
ஈரோடு முதல் வெள்ளித்திருப்பூர் வரையிலான 47 கி.மீ வழித்தடம் மற்றும் காக்கப்பாளையம் முதல் அந்தியூர் வரையிலான 88 கி.மீ வழித்தடத்தில் பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து நிறுவனத்தில் சுமார் 15 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் குடும்பங்களும் இந்தத் தொழிலையே நம்பியுள்ளார்கள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றி பயணத்திட்ட பயனாளிகளின் கட்டணமாக ஆண்டுக்கு 6ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஏற்று கொண்ட நிலையில் இது போல இழப்பீடு வழங்கி தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த திட்டத்தை அரசிற்கு எதிரானது என்றும், மனு மீதான இறுதி தீர்ப்பு வரும் வரை இத்திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் ம்னுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் இந்த மனு இன்று (அக். 5) விசாரணைக்கு வர உள்ளது.