

போலீசாரின் கண்காணிப்பை மீறி சென்னையில் நேற்று இரவு கார் ரேஸ் நடந்துள்ளது. சென்னை கோட்டூர்புரம் சாலை வழியாக இந்த கார் ரேஸ் நடைபெற்றுள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக சனிக்கிழமைகளில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ரேஸ் மற்றும் கார் ரேசில் ஈடுபடுகிறார்கள். போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், இளைஞர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது.
கடந்த 3-ந்தேதி இரவு அடையாறு மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற சென்னை கிரீன் வேஸ் சாலை பகுதியை சேர்ந்த குகன் (வயது 21) என்ற வாலிபர் சாலை தடுப்பில் மோதி பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது குகன் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையில் மோட்டார் சைக்கிள் ரேசை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் போலீசாரின் கண்காணிப்பை மீறி சென்னையில் நேற்று இரவு கார் ரேஸ் நடந்துள்ளது. சென்னை கோட்டூர்புரம் சாலை வழியாக இந்த கார் ரேஸ் நடைபெற்றுள்ளது.கோட்டூர்புரம் பகுதியில் ரேசில் ஈடுபட்ட கார் அசுர வேகத்தில் செல்வதும், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களை முந்திச்செல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
ரேசில் செல்லும் கார் சாலையில் செல்லும் மற்ற வாகனங்களை மிகவும் ஆபத்தான வகையில் முந்தி சென்றது. இதனால் சாலை யில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்து டனேயே சென்றனர்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.