

கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நீண்டநாட்களாக நோட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைதான வெங்கடேஷ்ராஜா தெரிவித்து உள்ளார்.
ஆவடி அருகே மோரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயபால். காய்கறி கடை வைத்து உள்ளார். இவரது மனைவி செந்தூர்கனி. மூதாட்டியான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சுடிதார் அணிந்தும், முகத்தை துப்பட்டாவால் மூடி சுற்றிய படியும் பெண் வேடமிட்டு மர்ம நபர் ஒருவர் செந்தூர் கனியின் வீட்டிற்கு வந்தார்.
திடீரென அவர் கத்தியைக் காட்டி மிரட்டி செந்தூர்கனி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறித்துத் தப்பி சென்று விட்டார். இதில் செந்தூர் கனியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் செந்தூர் கனியிடம் நகை பறித்து தப்பியது அதே பகுதியைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் வெங்கடேஷ் ராஜா (35) என்பது தெரியவந்தது. போலீசில் சிக்காமல் இருப்பதற்காக பெண் வேடமிட்டுச் சென்று நகையைப் பறித்து உள்ளார்.
ஆனால் கண்காணிப்பு கேமராகாட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி ஒரே நாளில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நீண்டநாட்களாக நோட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைதான வெங்கடேஷ்ராஜா தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே வெங்கடேஷ் ராஜா சாலையில் நடந்து சென்று நோட்ட மிடுவதும் பின்னர் சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு செந்தூர்கனியின் வீட்டிற்குள் சென்று சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு இரண்டே நிமிடத்தில் மீண்டும் திரும்ப செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.