கார் மோதியதில் 25 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி

பாலத்திலிருந்து கீழே விழுந்த மணிகண்டனுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
கார் மோதியதில் 25 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி
Published on: 
Summary

விபத்துக்கான காரணம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது55). இவர் கேரளாவில் கடை வைத்து நடத்தி வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் அங்கேயே வசிக்கிறார்.

விபத்து

இந்தநிலையில் வாகை குளத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக, முருகன் தனது குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் முருகன் நேற்று இரவு தனது காரில் குடும்பத்துடன் மீண்டும் கேரளாவுக்கு புறப்பட்டார். காரை முருகனே ஓட்டியிருக்கிறார்.

அவர்களது கார் நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது நாகர்கோவில் வாத்தியார் விளையை சேர்ந்த மணிகண்டன்(வயது45) என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தார். வடசேரி சந்தையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவரது மோட்டார் சைக்கிளிலும், முருகனின் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

பலத்த காயம்

கார் மோதிய வேகத்தில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவர் பாலத்தில் மேல் பகுதியில் இருந்து கீழே 25 அடி பள்ளத்தில் விழுந்தார். ​பாலத்திலிருந்து கீழே விழுந்த மணிகண்டனுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இருப்பினும் அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் தலையில் படுகாயம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் அவர் உயரத்தில் இருந்து கீேழ விழுந்ததால் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அவரை உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போக்குவரத்து பிரிவு போலீசார்

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் மணிகண்டனை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாகர்கோவில் மாநகர போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்தில் சிக்கிய கார் மற்றும் மோட்டார்சைக்கிளை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடக்க யார் காரணம்? என்பதை கண்டறிய சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.

X