சாலை தடுப்பு கட்டையில் மோதிய தனியார் பஸ்- 20 பயணிகள் காயம்

விபத்து காரணமாக அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை தடுப்பு கட்டையில் மோதிய தனியார் பஸ்- 20 பயணிகள் காயம்
Published on: 
Summary

விபத்து நடந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொழுதூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது.

தனியார் பஸ்

இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தனியார் பஸ் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து அவர் பஸ்சை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதில் டிரைவரின் கவனம் சிதறியதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த தடுப்புக்கட்டையில் பலமாக மோதி நின்றது.

20 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த லட்சுமி(வயது40), கவிதா(45), ஆசிகா(18), சந்தியா(40), அகல்யா(23), விக்டோரியா(36), அன்புராஜன்(33), செல்வராஜ்(52), செல்வகுமார்(19) உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

விபத்து நடந்ததை அடுத்து பஸ்சை இயக்கி வந்த டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கி அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

விசாரணை

இந்த விபத்து நடந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com