

விபத்து காரணமாக உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு ஆம்னி சொகுசு பஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
ஆம்னி சொகுசு பஸ் இந்த சொகுசு ஆம்னி பஸ், நள்ளிரவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் முன்பு மற்றொரு சொகுசு ஆம்னி பஸ்சும், தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தேநீர்க் கடையின் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பின்னால் வந்த சொகுசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கால் விரல் துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்களில் காயத்துடன் இருந்த பயணிகளை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த சாலையில், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்தில் சிக்கிய சொகுசு பஸ்களில் பயணம் செய்த பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, மாற்றுப் பஸ்கள் வரவழைக்கப்பட்டு, அதில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நள்ளிரவு நேரத்தில் 2 சொகுசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தால் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.