சென்னை பெரியமேடு லாட்ஜில் அண்ணன்-தம்பி தூக்கு போட்டு தற்கொலை: தாய் இறந்த விரக்தியில் விபரீத முடிவு

இருவரும் எதற்காக சென்னை வந்து தற்கொலை செய்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
Suicide
Published on: 

சென்னை பெரியமேடு ரங்கய்யா தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் 2 வாலிபர்கள் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

கடந்த 29-ந்தேதி லாட்ஜிக்கு சென்று இருவரும் தேர்வு எழுதுவதற்காக சென்னைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தங்களது அடையாள அட்டைகளை கொடுத்து லாட்ஜில் தங்கினார்கள்.

அழுகிய நிலை

இந்தநிலையில் நேற்று இரவு வாலிபர்கள் தங்கிய அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் ஊழியர் சுப்பிரமணி என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பெரியமேடு போலீசார் லாட்ஜுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் துர்நாற்றம் வீசிய அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது 2 வாலிபர்களும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். இதுகுறித்து கிடைத்த முதற்கட்ட தகவலில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

விருதுநகர்

போலீஸ் விசாரணையில் கார்த்திக் (28), வினோத் (21) என்பது தெரியவந்தது. விருதுநகர் மாவட்டம் ரோஷப்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்த இருவரும் அண்ணன்-தம்பி என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரும் எதற்காக சென்னை வந்து தற்கொலை செய்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தாய் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் இருவரும் இந்த துயர முடிவை தேடிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தாய் தற்கொலை

தங்களது தாய் மற்றும் தந்தையின் குடும்பத்துக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சகோதரர்களின் தாய் உமா மலர்தேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.

தனது கணவர் ராஜுவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன்களுடன் உமா மலர்தேவி வசித்து வந்துள்ளார். மகன்கள் கடன் வாங்கி புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளனர். இந்த வீட்டில் தான் கார்த்திக் ராஜாவும், வினோத்தும் தாயுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

ஆனால் தாய் இறந்த நிலையில் இருவரும் உயிர் தப்பினார்கள். இதன் பிறகு இருவரும் கடுமையான மனஉளைச்சல் மற்றும் சோகத்தில் இருந்து உள்ளனர். தாய் உயிரிழந்தது குறித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் அடிக்கடி பேசி வருத்தப்பட்டு உள்ளனர்.

விபரீத முடிவு

இதனைத்தொடர்ந்து தாய் இல்லாத இந்த உலகில் வாழ்வதற்கு விருப்பம் இன்றி இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்தனர். இதற்காக விருதுநகரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

கடந்த 29-ந்தேதி லாட்ஜில் தங்கிய பிறகு இருவரும் 3 நாட்களாக அறையில் இருந்து வெளியில் வராமல் இருந்துள்ளனர். இந்தநிலையில் தான் நேற்று அவர்களது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

3 நாட்களுக்கு முன்பே

இதன்மூலம் இருவரும் 3 நாட்களுக்கு முன்பே அறையில் தங்கியவுடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. லாட்ஜ் ஊழியர்கள் இதனை கவனிக்காத நிலையில் தான் துர்நாற்றம் வீசிய பிறகே 2 பேரும் உயிரிழந்து இருப்பது வெளியில் தெரியவந்து உள்ளது.

இருவரும் தற்கொலை செய்து கொண்டது பற்றி அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ் பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு சகோதரர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

குடும்ப தகராறில் ஏற்கனவே தாய் இறந்துவிட்ட நிலையில் தற்போது அவரது 2 மகன்களும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது அவர்களின் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com