

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து வருகிற 13-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையில் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் 13-ந்தேதி அன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் விழாவில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்கள்.
புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு அரங்குகளில் தினந்தோறும் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தினந்தோறும் மாலை கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளன.
மாணவ-மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்திடவும், புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்து உள்ளார்.