கோவையில் 1500 கோழிப்பண்ணைகளில் கால்நடை அதிகாரிகள் ஆய்வு

தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் உயிரிழந்த கோழிகளை நகராட்சி ஊழியர்கள் உடனடியாக தீ வைத்து எரித்தனர்.
கோவையில் 1500 கோழிப்பண்ணைகளில் கால்நடை அதிகாரிகள் ஆய்வு
Published on: 
Summary

கோவை மாவட்டத்தில் உள்ள 1500 கோழிப்பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சித்தாபுதூர் சங்கனூர் நீரோடை அருகில் 14 நீர்வாழ் குளத்து கொக்குகள் இறந்து கிடந்தன.

பறவைக்காய்ச்சல்

தொடர்ந்து கோவை வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு இறந்து கிடந்த 2 பறவைகளின் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளில் இறந்த கொக்குக்கு பறவைக்காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு, வனப்பறவைகளில் ஏதும் இறப்பு உள்ளதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் உள்ள 1500 கோழிப்பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு இதுவரை வளர்ப்பு கோழிகளின் எச்சங்கள், ரத்தம் உள்ளிட்ட 630 மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

மருத்துவர்கள் ஆய்வு

அனைத்து கால்நடை உதவி மருத்துவர்களும் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட கோழிப் பண்ணைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கோழிகளுக்கு ஏதேனும் அசாதாரண இறப்பு அல்லது நோய் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுவும்தவிர மண்டல இணை இயக்குனர், கோழி நோய் கண்டறியும் ஆய்வக உதவி இயக்குனர் மற்றும் குழுவினர், கோட்ட உதவி இயக்குனர்கள் ஆகியோரும் கோழி பண்ணைகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.

வலசை பறவைகள்

கால்நடை மருந்தகங்களின் உதவி மருத்துவர்கள், தங்கள் எல்லைக்கு உள்பட்ட நீர்நிலைகளுக்கு தினமும் சென்று அங்குள்ள வலசை பறவைகளின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வனப்பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகளில் ஏதேனும் அசாதாரண இறப்பு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக ஏதாவது ஒரு பண்ணையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டால் அந்த பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளும் மொத்தமாக கொல்லப்பட்டு கிருமி நாசினியுடன் புதைக்கப்படும். ஆனால் தற்போது கொக்குவிற்கு மட்டுமே பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளதால் கோழி பண்ணைகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லாரியில் இறந்த கோழிகள்

மேலும் அண்டை மாநிலத்தில் இருந்து நோய்த்தொற்று பரவலை தடுக்க 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவை மாவட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தற்போது வரை பறவை காய்ச்சல் இல்லை என்று கால்நடைத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவியதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக-கேரள எல்லையான கூடலூர் சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடலூர் நகராட்சி

இந்த நிலையில் நேற்று மதியம் ஊட்டியில் இருந்து கூடலூர் நகருக்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்தது. அந்த வாகனத்தை கூடலூர் நகராட்சி அலுவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் இருந்த கோழிகள் மிகவும் சோர்வாக காணப்பட்டன. இதனால் அந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்குமோ என்று அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து அந்த மினி லாரியை கூடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் அந்த மினி லாரியில் இருந்த கோழிகளில் ஒருசில உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. ஆனாலும் மீதம் உள்ள 100-க்கும் மேற்பட்ட கோழிகள் நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் உயிரிழந்த கோழிகளை நகராட்சி ஊழியர்கள் உடனடியாக தீ வைத்து எரித்தனர்.

X