மரகதம் குமரவேல்-சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு

​திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா.
மரகதம் குமரவேல்- சத்தியபாமா
Published on
Summary

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1975-ம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அ.தி.மு.க. கட்சியில் தீவிரமாக செயல்பட்டு பின்னர் 2026 மே மாதத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

மரகதம் குமரவேல்

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், அ.தி.மு.க.வில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒன்றிய தலைவராக இருந்தார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் மதுராந்தகம் தொகுதியில் அ.திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.வில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2026 தேர்தலில் அவர் 69,284 வாக்குகள் பெற்று, த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரீனை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கடந்த மே மாதம் 25-ந்தேதி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். தற்போது மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சத்தியபாமா

​திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. இவர் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தார். உள்ளாட்சியில் சிறப்பான களப்பணியாற்றிய இவருக்கு, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தீவிர பிரசாரத்திற்குப் பிறகு, 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாகத் தேர்வானார்.

சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க.வில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்தார்.

விலகினார்

​இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதோடு, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

​தற்போது காலியாக உள்ள தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட சத்தியபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் வாய்ப்பு

​மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அப்பகுதியில் பணியாற்றிய அனுபவமும் செல்வாக்கும் அவருக்கு இருப்பதால், த.வெ.க. தலைமை அவரை மீண்டும் தாராபுரம் தொகுதியில் களமிறக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தாராபுரம் தொகுதியின் தேர்தல் களம் தற்போதே பெரும் பரபரப்பை அடைந்துள்ளது.

வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சத்யபாமாவின் தந்தை பெயர் பொன்னுசாமி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1975-ம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அ.தி.மு.க. கட்சியில் தீவிரமாக செயல்பட்டு பின்னர் 2026 மே மாதத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தார்.

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலில் 81,100 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி.இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com