சேலத்தில் ரூ.70 கோடி மோசடி- வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உடந்தையா?

கடனுக்கான தவணை தொகையை உடனே செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கைதானவர்களை படத்தில் காணலாம்
கைதானவர்களை படத்தில் காணலாம்
Published on: 
Summary

போலீசார் நடத்திய ெதாடர் விசாரணையில் இந்த மோசடி சம்பவத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர் கண்ணகி (45), இவர் சேலம் அஸ்தம்பட்டியில் ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறார்.

நூதன மோசடி

இந்த டிரஸ்ட் மூலம் மாணவர்கள் மற்றும் வேலை இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஆதார் அட்டையை வாங்கி உள்ளார். பின்னர் அந்த ஆதார் கார்டுகள் மூலம் தனியார் வங்கியில் கறவை மாடு வாங்க ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று அவர்களுக்கு 1000 மட்டும் கமிஷன் கொடுத்து விட்டு மீதி பணத்தை தங்களுக்கு வேண்டிய கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

இந்த நிலையில் தனியார் வங்கியில் இருந்து ஆதார் கார்டில் உள்ள முகவரிகளுக்கு கறவை மாடு வாங்க பெறப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கான தவணை தொகையை உடனே செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மாணவர்கள் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட மாணவர்கள் 25 பேர் உள்பட பலர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சரண்யா தேவி விசாரணை நடத்தினார்.

ரூ. 70 கோடி மோசடி

விசாரணையில், சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.70 கோடிக்கும் மேல் இது போல மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். மேலும் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்றும் போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையே இந்த ேமாசடி தொடர்பாக டிரஸ்ட் நிர்வாகி கண்ணகி, அவரது கூட்டாளி முத்துக்குமரன் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக கண்ணகியிடம் மோசடி பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார், சொத்து வாங்கி குவித்தாரா, அல்லது வேறு யாரிடமும் பணத்தை கொடுத்து வைத்துள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

மேலும் 4 பேர் கைது

இதற்கிடையே அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 10-க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடினர்.

இதில் மோனிஷா (28), அஜித்குமார் (27), சுகுமார் (30), அரவிந்த் (23) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களை இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கிறார்கள். தலைமறைவாக உள்ள மேலும் 4 ேபரை தேடி வருகிறார்கள்.

வங்கி அதிகாரிகள் ஊழியர்களுக்கு தொடர்பு

மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த மோசடி சம்பவத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் இதில் தொடர்புள்ள வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் ெதாடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

X