வாழப்பாடியில் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்க தேன்வாழைகள் கொள்முதல்

தேன்வாழைக்கு நல்ல வரவேற்பும் விலையும் கிடைத்ததால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாழப்பாடியில் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்க தேன்வாழைகள் கொள்முதல்
Published on: 

பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு கோவில் நிர்வாகமும், பஞ்சாமிர்தத்திற்கு புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் விளையும் தேன்வாழையை முகவர்கள் வாயிலாக கொள்முதல் செய்து வந்தனர்.

வாழப்பாடி

சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், ஆத்தூர், தலைவாசல் பகுதியில் வசிஷ்டநதி மற்றும் கரியக்கோயில் ஆற்றுப்படுகை கிராமங்களிலும், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோவில் அணை, புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசன வசதி பெறும் கிராமங்கள் மட்டுமின்றி, மல்லியகரை, கோபாலபுரம், கீரிப்பட்டி, தம்மம்பட்டி, கடம்பூர், கூடமலை, சீனியம்பட்டி, உலிப்புரம் உள்ளிட்ட கிராமங்களிலும் ஆண்டு முழுவதும் கிணறு மற்றும் ஆழ்துளை பாசன வசதி கொண்ட விளைநிலங்களில் நீண்டகால பலன் தரும் பல்வேறு ரக வாழையை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.

வாழை

சேலம் மாவட்டத்தையொட்டி நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள சிங்கிலியன்கோம்பை, திம்மநாயக்கன்பட்டி, மத்துரூட்டு, வேப்பிலைக்குட்டை, ஈஸ்வரமூர்த்திபாளையம், உரம்பு, தாண்டகவுண்டன் பாளையம், மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி பகுதி கிராமங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது.

சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதி கிராமங்களில் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்படும் பெரும்பாலான வாழைத்தார்கள், வாழப்பாடியில் கூடும் தனியார் தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

பஞ்சாமிர்தம்

பல்வேறு பகுதியை சேர்ந்த வியாபாரிகள், இச்சந்தையில் வாழைத்தார்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு கோவில் நிர்வாகமும், பஞ்சாமிர்தத்திற்கு புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் விளையும் தேன்வாழையை முகவர்கள் வாயிலாக கொள்முதல் செய்து வந்தனர்.இதனால், தேன்வாழைக்கு நல்ல வரவேற்பும் விலையும் கிடைத்ததால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொள்முதல் வீழ்ச்சி

இதற்கிடையே கடந்த 2 ஆண்டாக தேன்வாழை கொள்முதல் செய்வது குறைந்து போனதால் விலை வீழ்ச்சியடைந்தது. தற்போது வாழப்பாடி தனியார் காய்கறி தரகு மண்டியில் இருந்து பஞ்சாமிர்தத்திற்கு தேன்வாழை கொள்முதல் செய்வதை மீண்டும் முகவர்கள் தொடங்கியுள்ளனர்.

நேற்று 2 டன் தேன் வாழைகள் கொள்முதல் செய்தனர். இதனால் மற்ற வாழையை விட தேன்வாழைக்கு கூடுதல் விலை கிடைத்து வருவதால் சேலம் கிழக்கு மாவட்டத்தில் தேன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X