கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை

கனமழை காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பி தண்ணீர் ஏரிச்சாலையில் செல்வதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை
Published on: 
Summary

அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து விடுவர்.

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பிறமாவட்டத்தில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, கானல்காடு, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கல்லகிணறு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரியூர், பாச்சலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

நீர்வீழ்ச்சி

இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிப்பதுடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து விடுவர்.

ஆனால் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வர். இந்த நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் நீர் வீழ்ச்சி வறண்டு பாறை மட்டுமே காட்சி அளிக்கிறது. மேலும் தற்போது மழை பெய்ய தொடங்கியதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கனமழை

கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பி தண்ணீர் ஏரிச்சாலையில் செல்வதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கொடைக்கானல் மற்றும் மலைகிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு மண்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுதல், வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படுகிறது.

கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் மண்சரிவு, சாலையில் பள்ளங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும். தற்போதைய வானிலை நிலவரத்தின்படி வரும் நாட்களிலும் மழை அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொடைக்கானல், தாண்டிக்குடி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்.

மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மழை அளவு

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 493 மி.மீ. மழை அளவு பதிவானது. திண்டுக்கல் 12.20, காமாட்சிபுரம் 21, நத்தம் 108.50, நிலக்கோட்ைட 1.20, சத்திரப்பட்டி 37.60, வேடசந்தூர் 81, பழனி 67, ரோஸ்கார்டன் 18, பிரையண்ட் பூங்கா 67 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com