

மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டியை நாளான நேற்று பகலில் விட்டு விட்டு கனமழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பொழிந்தது. இதனால் பண்டிகை கொண்டாடிய மக்கள் சற்று வருத்தம் அடைந்தனர்.
நெல்லை மாநகரில் டவுன், பாளை, வண்ணார்பேட்டை சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக பாளையில் 4 1/2 சென்டிமீட்டரும், நெல்லையில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.
மாவட்டத்தில் ராதாபுரம், சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 4 சென்டிமீட்டர் மழை பெய்தது.
களக்காடு, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்திலும் விட்டு விட்டு தொடர்மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மாஞ்சோலை வனப்பகுதியில் ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பெய்தது. நாலுமுக்கில் 4 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83 அடியை நெருங்கி உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 500 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 67.61 அடி நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்திலல் நேற்று பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் விட்டு விட்டு சாரல் அடித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடனா அணையில் 62½ அடி நீர் இருப்பு உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 50 அடியாகவும் உள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள், தீபாவளி கொண்டாட சொந்த ஊர் வந்த மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டி னத்தில் மிக கனமழை கொட்டியது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூரில் 6 சென்டிமீட்டரும், சாத்தான்குளத்தில் 4 சென்டிமீட்டரும் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டத்தில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.