

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 2.47 லட்சம் விளை நிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 105 அடி அடி கொண்டது.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் நீலகிரி பகுதியில் பலத்த மழை பெய்ததால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பவானிசாகர் அணை பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.55 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 56 ஆயிரத்து 672 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தற்போது 5 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்துவிட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதைப்போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 8 அடியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 29 அடியாக அதிகரித்துள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.14 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.72 அடியாகவும் அதிகரித்து உள்ளது.
இரவு முழுவதும் மலைக்கொட்டி தீர்த்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் இருக்கும் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் இரு கரையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது.
இதன் காரணமாக கோபிசெட்டிபாளையம் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளநீர் அபாய கட்டத்தை தாண்டி பாய்ந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொடிவேரி தடுப்பணை முன்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கொடிவேரி தடுப்பணைக்கு குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.