மாணவர்கள் போராட்டத்திற்கு தடை: இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா? - திமுக கேள்வி

முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?
மாணவர்கள் போராட்டத்திற்கு தடை: இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா? - திமுக கேள்வி
Published on

திண்டுக்கல்லில் இடதுசாரிகளின் விவரங்களை திரட்டக் கூறியது, மாணவர்களை போராட்டங்களில் பங்கேற்படை தடுக்கக் கூறியது உள்ளிட்ட உத்தரவுகள் முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் வெளியிடப்பட்டதா என்றும், இத்தகைய உத்தரவுகளை கண்டும் காணாமல் இடதுசாரி கட்சிகள் இருக்கப் போகிறதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில் சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக த.வெ.க அரசு பின்வாங்கியுள்ளது.

அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

த.வெ.க அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com