

ஓடும் ரெயிலில் பெண் குழந்தை தனியாக கிடந்ததும், அதனை ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு அந்த ரெயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு சேலம் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று நள்ளிரவு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்து பின்னர் புனேவுக்கு புறப்பட்டு சென்றது.
இந்த ரெயில் நேற்று நள்ளிரவு 12.55 மணியளவில் தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் பின்புறம் உள்ள பொதுப்பெட்டி இருக்கையில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று நீண்ட நேரமாக தனியாக கிடப்பதை பயணிகள் பார்த்தனர். அந்த குழந்தைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பொம்மிடி ரெயில்வே போலீஸ்காரர் ரமேஷ் மற்றும் போலீசார் அந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
அந்த பெண் குழந்தை சேலம் ஜங்சன் ரெயில்வே பெண் தலைமை காவலர் அம்சவள்ளி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சமாதானம் ஆகியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை அவர்கள் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த குழந்தையின் பாதுகாப்பு கருதியும், அதனை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நோக்கிலும் சேலம் மாவட்ட குழந்தைகள் மைய அதிகாரி கவுசல்யாவிடம் அந்த குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை அவ ர்கள் தற்போது பராமரித்து வருகிறார்கள்.
மேலும் இந்த குழந்தையை ரெயிலில் விட்டு சென்றது யார், பெண் குழந்தை வேண்டாம் என்ற நோக்கத்தில் விட்டு சென்றனரா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் அங்கு விட்டு சென்றனரா? அந்த குழந்தையை கொண்டு வந்தவர் எங்கிருந்து ரெயிலில் ஏறினார், எங்கு இறங்கி சென்றார் ? என்பது தொடர்பாக சேலம், நாமக்கல், கரூர் உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் ரெயிலில் பெண் குழந்தை தனியாக கிடந்ததும், அதனை ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு அந்த ரெயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.