ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மூன்று வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் அசேலியா மலர்கள்

குளிர்காலத்தில் பூத்துக் குலுங்கும் அசேலியா மலர்கள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் இயற்கை அழகிற்கு மேலும் மெருகூட்டி வருகின்றன.
அசேலியா மலர்கள்
அசேலியா மலர்கள்
Published on: 
Summary

ஊட்டியில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், தாவரவியல் பூங்காவின் இத்தாலியன் பூங்கா பகுதியில் அசேலியா மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பனிக்காலத்தை முன்னிட்டு மூன்று வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் அசேலியா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

அசேரியா மலர்கள்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சக்கணக்கான மலர்ச்செடிகள், மூலிகைத் தாவரங்கள், பெரணிகள், கள்ளிச்செடிகள் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல்வேறு வெளி நாடுகளைச் சேர்ந்த அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச்செடிகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றில் பல தாவரங்கள் குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை.

அசேலியா மலர்கள்

தற்போது ஊட்டியில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், தாவரவியல் பூங்காவின் இத்தாலியன் பூங்கா பகுதியில் அசேலியா மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன. குறிப்பாக, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான குளிர்ச்சியான கால நிலையில் இங்குள்ள அசேலியா செடிகளில் மலர்கள் அதிகளவில் பூக்கின்றன.

ஆண்டின் பிற மாதங்களில் பசுமையான புதர்ச்செடிகளாகக் காட்சியளிக்கும் இவை, தற்போது வண்ண மயமான மலர்களால் பூங்காவிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன.

மூன்று வண்ணங்களில் கண்கொள்ளாக் காட்சி

இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் இளஞ்சி வப்பு கலந்த வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் பூத்துள்ள அசேலியா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள இம்மலர்கள், பசுமையான இலைகளுக்கு இடையே அழகிய வண்ண ஓவியங்களைப் போலக் காட்சியளிக்கின்றன.

அசேலியா மலர்கள் பொதுவாகப் புனல் வடிவில் காணப்படுகின்றன. இவை ரோடோடென்ட்ரான் தாவரக் குழுவைச் சேர்ந்தவை. பல்வேறு வகைகள் மற்றும் கலப்பினங்களில் வெவ்வேறு நிறங்களில் மலர்கள் காணப்படுகின்றன.

புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மூன்று வண்ணங்களில் பூத்துள்ள அசேலியா மலர்களைக் கண்டு ரசிப்பதுடன், அவற்றின் அருகே நின்று புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து மகிழ்கின்றனர்.

வண்ணமயமான மலர்கள்

பனிக்காலத்தின் குளிர்ச்சியான சூழல், பசுமையான புல்வெளிகள், வண்ணமயமான மலர்கள் ஆகியவை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிய அனுபவத்தை அளித்து வருகின்றன.

குளிர்காலத்தில் பூத்துக் குலுங்கும் அசேலியா மலர்கள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் இயற்கை அழகிற்கு மேலும் மெருகூட்டி வருகின்றன.

X