

பேரணியில் பங்கேற்ற தொழிலாளர்கள், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் கோட்டை நோக்கி பேரணி இன்று நடந்தது. மாநிலத் தலைவர் மனோகர் தலைமையில் எழும்பூர் சித்ரா திரையரங்கு அருகில் இருந்து பேரணி புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை வரை நடை பெற்றது.
இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். பேரணியில் பங்கேற்ற தொழிலாளர்கள், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மீட்டர் கட்டணம் உயர்த்தாமல் உள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலைக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.
ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பன்னாட்டு நிறுவனமான பைக் டாக்சி, ஓலா, உபர் ராபிட்டோ போன்ற நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். மிகவும் நலிவடைந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்.
வெற்றிப் பயணம் இலவச பஸ் சேவை மூலம் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக சுமை இல்லாத பொருட்களை ஆட்டோவில் ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும்.
மானியத்துடன் கூடிய குறைந்த வட்டியில் ஆட்டோ வாங்குவதற்கு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை சலுகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பேரணியில் இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் பக்தன், மாநில அமைப்பாளர் ராஜேஷ் நிர்வாகிகள் இளங்கோவன், பொதுச் செயலாளர் மகேஷ், பொரு ளாளர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.