

பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதனை தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு கூறுகையில்,
பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாங்கம் கூடுதலாக 45 ரூபாய் கொடுத்தால் தான் ஆவின் நிறுவனத்திற்கு பால் வரும். தனியாருக்கு பால் செல்லாமல் தடுக்க முடியும். எனவே அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
அரசு அறிவித்த விலை போதாது என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு லிட்டருக்கு பசும்பால் 50 ரூபாயும், எருமை பால் 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகையால் அரசு பரிசீலித்து உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கின்றனர். இன்றைக்கு கால்நடைகள் பராமரிப்பு, தீவனம் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் லிட்டருக்கு 46 ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரை வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கடந்த ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளால் ஆவின் நிர்வாகம் நிதி நெருக்கடியில் உள்ளது. பால் பொருட்கள் விற்பனை குறைந்து ஆவின் நிறுவனத்துக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடி உள்ளபோதும் பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் உயர்த்தி வழங்கியுள்ளார். பால் லிட்டர் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு தற்போது உற்பத்தியாளர்களுக்கு ரூ.41 வழங்கப்படுகிறது. பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்றார்.