

கூட்டுறவு வங்கி மற்றும் செல்போன் கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு இந்த செயல் நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரின் மையப் பகுதியான பஸ் நிலையம் அருகே காந்தி நகரில் ஆத்தூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு வங்கியின் இரவு காவலாளியாக கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த முத்துசாமி (வயது 59) என்பவர் பணியாற்றி வருகிறார்.
நள்ளிரவு 1 மணி அளவில் அவர் கண் அசந்த நேரத்தில் மர்ம நபர் அங்கு வந்து பெரிய பாறாங்கல்லை முத்துசாமியின் தலையில் தூக்கி போட்டார். இதில் வலியால் அலறிய முத்துசாமி சுதாரித்துக்கொண்டு திருடன் தான் வந்துள்ளார் என்பதை உறுதி செய்து அவனை துரத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த மர்ம நபர் உன்னை கொன்று விடுவேன். உனது செல்போனை கொடு என கேட்டுள்ளார். அந்த மிரட்டலுக்கு பயப்படாமல் காவலாளி சத்தம் போட்டவுடன் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற இருந்த கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த மர்ம நபர் கூட்டுறவு வங்கியின் சற்று தூரத்தில் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான செல்போன் கடை முன்பு படுத்திருந்த இரவு காவலாளி ராஜா (65) என்பவரை பாறாங்கல்லால் தாக்கி உள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கடை வாசலிலேயே உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரிடம் கடை சாவி உள்ளதா? என மர்ம நபர் தேடினார். காவலாளியிடம் சாவி இல்லாததால் அங்கிருந்து மர்ம நபர் தப்பி சென்று விட்டார்.
இந்த சம்பவம் செல்போன் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் இருப்பவர் கண்காணித்து செல்போன் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த பின்னரே மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த காவலாளி ராஜாவை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதுபோல் கூட்டுறவு வங்கி காவலாளியான முத்துசாமியும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 2 இடங்களில் இரவு காவலாளிகள் தாக்கப்பட்ட சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கூட்டுறவு வங்கி அருகே ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் இருக்காது. எனவே கூட்டுறவு வங்கி மற்றும் செல்போன் கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு இந்த செயல் நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.