

கள்ளக்குறிச்சியில் சிபிஎம் கட்சி தலைவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,
“கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை,
மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
உளுந்தூர்பேட்டையில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 21 அன்று இரவு கிளியூர் கிராமத்தைக் கடந்து காரை நிறுத்தியிருந்தபோது, வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கட்சித் தலைவர்களையும், கட்சியின் பெயரையும் மிக அசிங்கமாகத் திட்டி, காரிலிருந்த கட்சிக் கொடி மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும், தோழர்கள் அனைவரையும் கொலைவெறியோடு தாக்கியுள்ளனர். வடமாம்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், 'பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்' கீழ் 22 வீடுகளை கட்டாமலே அவராகவே பணத்தை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார்.
இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் போராடி வருகின்றனர்.
இதை மனதில் வைத்துக் கொண்டு, ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு இந்த வன்முறை மற்றும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து களமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், காயமடைந்த தோழர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், காவல்துறை இதுவரை ஒரே ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளது.
பொதுமக்களுக்கு ஆதரவாகப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட வடமாம்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாகக் கைது செய்து,
கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.