சென்னை மாநகராட்சி பகுதியில் புதிய குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பகுதியில் புதிய குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
Published on
Summary

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை, தென்சென்னை உள்ளிட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் புதிய இணைப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சரியான ஆவணங்கள் சமர்ப்பித்தால் 15 நாட்களில் செயல்முறை நிறைவு செய்யப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.100 மட்டுமே கட்டணம்.

சென்னை பெருநகர பகுதியில் எல்லை விரிவாக்கம் காரணமாக வட சென்னை மற்றும் தென் சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது.

திட்டங்கள்

மக்கள் தொகை மற்றும் வணிக நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அப்பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் மற்றும் முறையான கழிவுநீர் அகற்றுதல் வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் புதிதாக இணைக்கப்பட்ட வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகத் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்களை கட்டமைக்கும் பணிகளை பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக மணலி மண்டலத்திற்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடையன் குப்பம், கடப்பாக்கம், மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, மாதவரம், வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர், நெற்குன்றம், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்கப்பட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல சின்ன சேக்காடு, போரூர், நெற்குன்றம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், முகலிவாக்கம், மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கட்டமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற சென்னை குடிநீர் வாரியத்தின் (https://wsc.chennaimetrowater.in/#/nc/login) என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணைய வழி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய பொறியாளரால் விண்ணப்பதாரரின் வளாகம் ஆய்வு செய்யப்படும். விண்ணப்பதாரர் இணைய வழி மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர் வழங்கும் விபரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாகவும் முழுமையாகவும் இருந்தால் விண்ணப்ப செயல்முறை 15 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

ஏற்கனவே உள்ள குடிநீர் அல்லது கல்லூரி இணைப்புகளை புதுப்பித்தல் அல்லது வேறு இடத்திற்கு மாற்றுதல் போன்றவற்றிற்கு ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காகவும் அனைவரும் குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை பெற்றிட ஊக்குவிக்கும் வகையிலும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இணைப்பு கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.

எனவே புதிதாக குடிநீர், கழிவு நீர் இணைப்பு பெற விரும்புவோர் சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com