

தமிழ்நாடு சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை மீதான மானியக்கோரிக்கைகள் விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. உறுப்பினருமான பாலகிருஷ்ண ரெட்டி (ஓசூர்) பங்கேற்று பேசினார். அப்போது.,
“ஓசூரில் விமான நிலையம் தேவை இல்லை. இது என் குரல் அல்ல. விவசாயிகளின் குரல். பரந்தூரில் விவசாய நிலங்கள், விவசாயிகளின் கவலையை அரசு கவனத்தில் எடுத்தது போன்று ஓசூர் விவசாயிகளின் கோரிக்கையையும் அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
ஓசூரில் ஏற்கனவே மேம்பாட்டு திட்டங்களுக்காக விவசாயிகள் தங்களுடைய நிலங்களை கொடுத்துள்ளார்கள். ஓசூரில் ஏற்கனவே தனியார் விமான நிலையம் செயல்படுகிறது. அந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அனைத்து வசதிகளும் இருக்கிறது. பரந்தூர் விவசாயிகளின் குரலை கேட்டது போன்று ஓசூர் விவசாயிகளின் குரலையும் கேளுங்கள்.
நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் விவசாயிகளின் நிலத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம். ஓசூர் விவசாயிகளின் கவலையை உணர்ந்து புதிய விமான நிலையத்திட்டத்தை முதல்-அமைச்சர் கைவிட வேண்டும்.” என கோரிக்கை வைத்தார்.
அப்போது அவை முன்னவர் செங்கோட்டையன் குறுக்கிட்டு பேசினார். அவர் கூறுகையில், “எந்தவொரு திட்டத்தை கொண்டு வர வேண்டுமென்றாலும் விவசாய நிலங்களைதான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது. கர்நாடகாவைவிட ஓசூருக்கு வரும்போது நிறைய திட்டங்கள், வளர்ச்சி கிடைக்கும். அதனால்தான் அங்கு நிலங்களை எடுக்கிறோம்” என்றார்.