போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

எனது நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க உதவுவேன் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் விருது மற்றும் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.

உறுதிமொழி

இந்த விழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் விஜய் விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை வாசித்தார்.

அதனை மாணவ, மாணவிகள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழா மேடையில் முதலமைச்சர் வாசித்த உறுதிமொழி வருமாறு:-

அறிவுரை

போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்.

போதை பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் விஜய் உறுதி மொழியை வாசித்தார்.

ஆரவாரம்

இந்த விழாவுக்கு முதலமைச்சர் விஜய் வந்த போது மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். பலர் விஜய் மேடை ஏறியதும் தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் கூச்சலும் போட்டனர்.

உறுதிமொழியை வாசிப்பதற்கு முன்பு முதலமைச்சர் விஜய் ‘குட்மார்னிங்’. அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார்.

விருதுகள்

அப்போதும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்ட பிறகு சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் விருதுகளை வழங்கினார்.

இதன் பிறகு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி நிர்வாகிகளுடன் மேடைக்கு சென்று முதலமைச்சர் விஜய்யுடன் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com