

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு தனியார் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது.
பின்னர் அந்த அரிசி நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்குத் திரும்ப அனுப்பப்பட்டு, ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில் ரூ.10 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிதாக அரைக்கப்பட்ட அரிசியை தனியார் சந்தைக்கு அனுப்பிவிட்டு, பழைய ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சேர்த்திருப்பதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் தனியார் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத சுமார் 1,500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 இடங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களின் வீடுகளில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரத்தில் திம்மசமுத்திரம், காவேரிபாக்கம் உள்பட 9 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சஸ்பெண்டு ஆன அதிகாரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.