ஒரே விமானத்தில் வந்த அண்ணாமலை - சுதீஷ்... கூட்டணி குறித்து பேசினார்களா?

வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார்.பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை.
ஒரே விமானத்தில் வந்த அண்ணாமலை - சுதீஷ்... கூட்டணி குறித்து பேசினார்களா?
Published on

கே.கே. நகர்:

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது.

இது தொடர்பாக கட்சியின் தமிழக அளவிலான உயர்மட்ட தலைவர்கள் பல்வேறு கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது தேர்தல் கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று (புதன்கிழமை) காலை 7.10 மணிக்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தே.மு.தி.க. மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் வந்தனர்.

இதில் சுதீஷ் ரெகுலர் லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். அடுத்த சில மணித்துளிகளில் அண்ணாமலை வி.ஐ.பி. லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். இதைக் கண்டதும் அவர்களை வரவேற்க வந்திருந்த பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க. தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் 2 பேரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. ஆனால் விமானத்தில் சுதீஷ் முன்பக்க இருக்கையிலும், அண்ணாமலை பின்பக்க இருக்கையிலும் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது. ஆகவே இருவரும் சந்தித்ததற்கான எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகளும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆகவே ஒரே விமானத்தில் 2 கட்சிகளின் தலைவர்களும் பயணம் செய்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அண்ணாமலை கரூருக்கும், சுதீஷ் தஞ்சாவூருக்கும் புறப்பட்டுச் சென்றனர். 2 கட்சிகளின் தொண்டர்களும் அவர்களை வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com